Sunday, November 25, 2012

இமாலயக் கருணை - September 13 2012

உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா

<> இமாலயக் கருணை <>


அவ்விய நெஞ்சமோ(டு) அறிவிலார் கூட்டிலே அசடனாய் அலைந்து தன்னை
.. அன்றியோர் நினைப்புமே அற்றவன் ஆகநான் வாழ்ந்திடும் காலை உன்றன்

செவ்விய திருவடி தன்னையென் சிந்தையுள் செலுத்தியோர் விந்தை செய்து
.. தேவ!நீ வதிந்திடும் திருத்தலம் சேருமோர் ஆவலை விதைத்த பின்னர்

எவ்விதத் தடையதும் இரவிமுன் பனியென நீக்கி,நீ வதியு மந்த
.. இமயமாம் வரையினை எட்டிட வைத்தவண் இனியகே தாரநாத்தில்

இவ்வுரு இதுவென இயம்பிட இயன்றிடா எழிலுரு தன்னி லென்றன்
.. இருகரம் கொடுமலர் இடும்வணம் செய்தநின் இன்னருள் திறமும் என்னே!


அனந்த் 13-9-2012

குறிப்பு:

நான் கேதாரநாத் இறைவனைக் கண்ட நாள் எதேச்சையாக (அவன் இச்சையாக) பிரதோஷ நன்னாளாய் அமைந்தது

(29-8-2012) அன்றைய தினம் இங்கிட்டிருந்த பிரதோஷப் பாடலில், நான் திருத்தலங்கள் காணவியலா நெடுந்தொலைவில் புலம் பெயர்ந்து வாழ்வதை எண்ணிப் புலம்பியிருந்ததை ஈசன் செவிமடுத்தானோ என்று நினைக்கத் தோன்றியது.

===============
பாடலும் படங்களும அருமை! பாடலின் தலைப்பு "இமாலயக் கருணை"அருமையோ அருமை! அருள் பொழியும் பாடலும் பொருள் பொதிந்த தலைப்பும்!

நன்றி. வணக்கம்.

சிவசூரி.


மனமுருகுது மனத்தினுள்ளே
மன்னனிருக்க மன மயக்கத்திலேயே
மனமுருகுது மனமுருகுது
திவாகர் 
அன்பு அனந்த்
இறைவனாகிய “இ”வனை மால் அயனுடன் சேர்த்து “இமாலயக் கருணை” யாக விரித்துள்ள பொருள் சிறப்பினைப் பாராட்டுகிறேன்
அன்பன்
வவேசு

 

1 comment:

ananth said...

---------
பாடலும் படங்களும அருமை! பாடலின் தலைப்பு "இமாலயக் கருணை"அருமையோ அருமை! அருள் பொழியும் பாடலும் பொருள் பொதிந்த தலைப்பும்!

நன்றி. வணக்கம்.

சிவசூரி.

மனமுருகுது மனத்தினுள்ளே
மன்னனிருக்க மன மயக்கத்திலேயே
மனமுருகுது மனமுருகுது

..திவாகர்
……………………………………..

பேராசிரியர் அனந்தர்க்கருள் சிவனார் எனக்கும் அருளவேண்டிக் கைலையின் நாதனைப் பாடியது:

குஞ்சிக்கொரு திங்கட்சுடர் சூடி னாயே
கொன்றைத்தொடை செம்பட்டுடல் ஏந்தி னாயே
கொஞ்சத்தமிழ் கொண்டப்புவி வாழ வேண்டும்
கொண்டற்கிணை என்னப் பலர் கூறு மாறு
தஞ்சப்பதம் தங்கத்தமிழ் பேசு மாறு
சங்கக்கவி சந்தச்சபை ஓத வேண்டும்
நெஞ்சுக்கொரு இன்பச்சுவை பாயு மாறு
செஞ்சொற்கவி சிந்தப்புவி காண வேண்டும்.

வண்ணச்சடை எண்ணக்கடல் ஆடு மாறு
மங்கைக்கிளி தன்னிற்சரி ஆகு மாறு
சுண்ணப்பொடி என்னத்திரு நீறு பூசி
துங்கப்பனி மின்னத்திகழ் கைலை மேலே
எண்ணித்துதி அன்பர்க்கருள் ஈயு வாயே
வந்திக்கென மண்ணைத்தலை ஏந்தி னாயே
பண்டைத்தமிழ் மன்றச்சபை பேசி னாயே
பண்ணக்கவி வண்ணத்தமிழ் ஆகு வாயே!

சிவ சூரியநாராயணன்.

(பிழை பொறுத்தருள்க)

………………………………
சந்தம் மலிந்த பாடல் மிக அருமை. கயிலை நாதன் உங்களைக் கட்டாயம் தன்னருகில் ஈர்த்துக் கவிமழை பொழிய வைப்பான்.

அனந்த்
--------------