Tuesday, November 20, 2012

பிரதோஷப் பாடல் - May 06 2009

உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா

இன்று பிரதோஷ நன்னாள். அத்தோடு, தனியளாக ஆண்டு, திக்குவிசயம் செய்கையில் எதிர்கண்ட சிவபெருமானை (நேற்றைய தினம்) மணந்த மதுரை மீனாட்சியம்மை இன்று தம் மணாளனான சுந்தரரோடு சேர்ந்து திருத்தேரில் ஊர்வலம் வருகிறாள்.

இதுவரை அறம், பொருள், இன்பம், வீடு என்ற நாற்பயன்களை - புருஷார்த்தங்களை- தானே தனியாக வழங்கி ‘அர்த்த’ ‘நாரி’ ஆக இருந்த அங்கயற்கண்ணாள், இப்போது சிவனைத் தன் வலப்பாகத்தில் இணைத்து, ’அர்த்தநாரி’யாகத் தேரில் வருவதாகக் கற்பனை செய்யலாம்.

அதன் விளைவு கீழ்க்காணும் வண்ணப் பாடல்:

அர்த்தநாரி

சந்தக் குழிப்பு:

தந்த தனதன தந்த தனதன
.. தத்தத் தனதன தனதான
தந்த தனதன தந்த தனதன
.. தத்தத் தனதன தனதான

------------

கங்கை நதிமதி தும்பை மலரணி
..கற்றைச் சடைமுடி ஒருபாலுங்
... கந்தங் கமழுவ சந்த வனமென
..... கட்டுச் செறிகுழல் மறுபாலுங்

கங்குல் பகலொளிர் இந்து கதிரனல்
.. கக்கிச் சொரிவிழி ஒருபாலும்
... கஞ்ச மலரையும் விஞ்சி அழகது
...... கப்புக் கருவிழி மறுபாலும்

அங்கம் படரர வங்கள் நடமிட
.. அக்குத் தரியுடல் ஒருபாலும்
... அந்த மிகுதர ளங்க ளிவையணி
.... அச்சுப் பசுமுட லொருபாலென்(று)

எங்கு முளபர மிந்த இருஉரு
.. இட்டத் தொடுகொளும் விதமேவந்(து)
....எங்க ளுளமதி லொன்றி ஒருநிலை
  .. எட்டத் திருவருள் புரிவாயே!

கஞ்சம் = தாமரை;
அச்சு = வார்ப்பு;
அக்கு = உருத்திராக்ஷம்; எலும்பு;
தரி = அணிகின்ற;
இட்டம் = இஷ்டம், விருப்பம்

No comments: