Tuesday, November 20, 2012

பிரதோஷப் பாடல் - April 22 2009

உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா

வருவேன்

கணங்கள் கழியும் தோறும் என்றன்
.. கடந்த வினையால் அடைந்த இந்த
நிணங்கொள் காயம் நீக்கி உன்தாள்
..நிழலைச் சேரும் காலம் நெருங்கும்
வணங்கக் கரமும் வாழ்த்த நாவும்
.. வரமாய்த் தந்த இறையே! விரைவில்
அணங்கோ டரங்கில் ஆடும் பொழுதிவ்
.. வன்பன் வந்துன் அருளில் நனைவேன்.

1 comment:

ananth said...

=============
அருமை!
நீக்கி? நீங்கி?
பசுபதி
22-4-09
=====================

அருளில் நனைய அவாவுறும் பாடல்
அருமையைச் சொல்லநான் யார்?

குறிப்புகள்
1 “கணங்கள் கழியும், ஐயா என்றன்” என்று இருந்தால் இன்னும் சிறக்குமோ?
2 விரைவில் என்பதைத் தீர்மானிப்பது யார்? அதை நாம் ஏன் கையில் எடுத்துக்கொள்ளவேண்டும்?

எனவே

வணங்கக் கரமும் வாழ்த்த நாவும்
வரமாய்த் தந்த இறையே, நீயுன்
அணங்கோ டரங்கில் ஆடும் பொழுதில்
அன்பன் வந்துன் அருளில் நனைவேன்.

என்றும் இருக்கலாமோ?

அன்புள்ள இலந்தை,
6-6-2009

================================

’ஒவ்வொரு கணம் கழியும் போதும், இந்தப் புன்மை உடலம் மறைந்து உன் திருவடி நிழலை அடையும் நேரம் நெருங்குகிறது. ஆதலால், ஏற்கனவே பல கோடிக் கணங்கள் கழிந்து போய் வயது முதிர்ந்த நான் உன்னைச் சார்ந்து உன் ஆடலைப் பார்த்து மகிழும் வேளை விரைவில் வர இருக்கிறது’ என்பதே நான் நினைத்ததும் இப்பாடலில் சொல்ல முயன்றதும் (இது என் wishful/wistful thinking only). இந்த வகையில், ‘கணங்கள் கழியும் தோறும்’ என்பதும், ‘விரைவில்’ என்பதும் பொருத்தமானவை என நினைக்கிறேன். ‘அணங்கோடு அரங்கில் ஆடும்’ என்பதில் ’உன்’ என்பது தொக்கி நிற்கிறது. இதே வகையில், ‘காயம் நீங்கி’ என்று நான் முதலில் இட்டதைக் ‘காயம் நீக்கி’ என்று
பின்னர் மாற்றியது தேவையில்லை என இப்போது தெரிகிறது. என் நினைப்புப் பற்றி உங்கள் கருத்துச் சொன்னால் நன்று.

அனந்த்
6-6-2009

=================================

நீங்கி என்பதுதான் பொருத்தமாக இருக்கும். எழுதிய கவிஞன் நினனப்பதுதான் என்றும் எங்கும் பொருத்தம்

இலந்தை
===========================