Tuesday, November 27, 2012

இது செய்வையோ? - October 27 2012

திருச்சிற்றம்பலம் 

<> இது செய்வையோ? <>
 

போக்கற்று நிற்குமெனைப் பரிவோ(டு) உசாவியுன்
... பொற்பதம் காட்டி உன்னை 

வாக்கிட்டுப் பாவியற்றும் வகையையும் கூட்டியுன்
... வடிவினைப் பாடு மாறு 

நாக்கிற்றேன் ஊட்டிப்பின் நாளும்நீ ஆடிடும்
.. நாட்டியம் காண வைப்பின் 

மூர்க்கர்க்கும் அருள்செய்யும் மூர்த்திநீ என்றுபார்
.. மொழிந்துனைப் போற்று மன்றே?
 

நாவிற்றேன் ஊட்டி – நாவில் தேன் ஊட்டி;

மூர்க்கர்= கீழ்மக்கள்,இழிஞர்


பாடல் பொருள் கீழே:

ஐயனே!

நல்வழி எதுவென்று அறியாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் என்னை
நீ கவனித்து,
பரிவுடன் என் குறை என்னவெனக் கேட்டு (உசாவி),
இங்கே பார் என்னுமாறு உன் பொன்னான திருவடிகளைக் காட்டி,
உன்மேல் நல்ல சொற்கள் கொண்ட பாடல்களை இயற்றும் விதத்தையும் எனக்குக் கைகூடவைத்து,
அதன் பின் உன் திருமேனி அழகைக் கூறும் பாடல்களை இசையோடு பாடுவதற்காக எனது நாவில் தேனை ஊட்டிப் பாடவும் வைத்து (அதனால் உன் உளம் மகிழ்ந்து)
எனக்கு நீ அனவரதமும் (புறத்தே தில்லையிலும் அகத்தே என் நெஞ்சுள்ளும்) ஆடும் திருநடனத்தைக் காண வைத்துவிடு.

(ஏன் நீ இவ்வாறெல்லாம் வேண்டுமென்று கேட்பாயானால்)

அப்படி நீ செய்தால்தான் என்போல் இழிந்த நிலையில் உள்ளவர்களுடைய குற்றங்களை அறிந்தும் அவர்மேல் சினம் கொள்ளாது, அதற்கு மாறாக, உனது திருவருளை அவர்களுக்கு நல்கும் இறைவன் என்று உலகத்திலுள்ளோர்களிடமிருந்து உனக்குப் புகழ்மொழி கிட்டும்

(எனவே கீழ்ப்பட்டவனான எனக்கும் உன் அருளைத் தருவாயாக).

No comments: