Wednesday, November 21, 2012

பிரதோஷப் பாடல் - February 05 2012

உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா

இன்று திருவாதிரை நட்சத்திரம் பொருந்திய பிரதோஷ நன்னாள்

மறத்தலாகாது

ஆடிக்கொண் டேநிற்கும் அம்பலத் தோய்!உனை அண்டிவந்து
பாடிக்கொண் டேநடம் பார்க்க வருமிந்த பத்தனையுன்
வாடிக்கை யாளனென் றேமதிக் காமல் மறந்துவிடில்
வேடிக்கை யாகும்உன் வேடம் எதற்(கு)அந்த வேதனையே!

தனைமறந் தென்னைத் துதிக்கும் இவனென் தனயனெனும்
நினைவினை விட்டு நிருத்தமே ஆடிநீ நின்றுவிடில்
அனையென உன்றன் அருகமர்ந் தன்பாய் அரவணைக்கும்
மனையவள் உன்னை மதியாள் இதனை மனங்கொள்வையே

வையத்தே ஆற்றும் வினைப்பயன் துய்த்தபின் மீண்டுமிங்கு
மெய்யொன்றைப் பெற்று மறுபடி மாளும் விதியுடையேன்
கையைத்தான் கூப்பிக் கழலடி பற்றிக் கரைதல்கண்டாய்
தையத்தாம் என்றிங்குத் தாண்டவம் செய்வோய்! தயைபுரியே!

No comments: