Wednesday, November 21, 2012

பிரதோஷப் பாடல் - January 20 2012

உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா

இன்று பிரதோஷ நன்னாள். சிதம்பர தரிசனம் தொடர்கிறது.


தேடிவந்த தெய்வம்

பட்டினியாய்ப் பலகாலம் படுத்திருந்த பாவியனைத்
தொட்டெழுப்பித் தோள்சுமந்து தொலைவிலுன்றன் சொர்ணமயக்
கட்டிடத்தி னுள்ளிருத்திக் கடலமுதை ஊட்டிவிட்டு
நட்டமொன்றும் காண்பித்தாய் நன்றிஎங்ஙன் நவில்வேனே.

(நட்டம் = நடனம்)


வாக்கிற்கெட்டா வண்மை

பொல்லேன்நான் என்றேன் பொறுத்திடு வேனென்றாய் போற்றியொர்சொல்
சொல்லேனென் றேனைத் துதிக்கவைப் பேனென்றாய்; சொன்னசபை
நல்லோய்!நின் நாட்டியம் காட்டியுன் வார்த்தையை நாட்டிவிட்டாய்
வல்லேனல் லேன்அருள் வண்மையை வாக்கில் வடித்திடவே!

சொன்னசபை = சொர்ண சபை, தில்லைப் பொன்னம்பலம்


எல்லையில்லா இன்னருள்

காத்திருந்தேன் என்றன் கனகசபை நாதனைக்கண்
பூத்தென் உயிர்பிரிந்து போகுமுனம் – ஈர்த்தென்னைத்
தில்லைப்பொன் அம்பலத்தில் சேவிக்க வைத்தனன்அவ்
எல்லையிலா இன்னருளுக் கில்லையொரு கைம்மாறே.

No comments: