Tuesday, November 20, 2012

பிரதோஷப் பாடல் - May 25 2010

உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா

தவிப்பு

சிந்தனைச் சிதற லாலே
.. சிவனுனைச் சிறிது நேரம்
வந்தனை செய்ய வொட்டா
.. வகையிலே என்றன் நெஞ்சம்
முந்தைய நினைப்பி லேயே
.. மூழ்கும்என் செய்வேன் அந்தோ!
எந்தைஎன் நிலையைக் கண்டும்
.. இரங்கிடா திருப்ப தேனோ?
 
புரட்டியே என்னை வாட்டும்
.. புலன்களின் பிடியில் சிக்கி
விரற்றுணை யேனும் உன்றன்
.. விறல்கழல் போற்றா தென்றும்
அரற்றியே கழிப்பேன் என்றன்
.. அவனிவாழ் நாளை; உன்றன்
அருட்டிறம் காட்டி என்னை
.. ஆட்கொளா திருப்ப தேனோ?
 
மெய்யெலாம் விதிர்க்கத் தங்கள்
.. விழியெலாம் அருவி யாக
ஐய!நின் பெருமை பேசும்
.. அடியவர் குழுவில் இன்று
கையிரண் டாலும் உன்றன்
.. கால்பிடித் தலறும் இந்தப்
பொய்யனை நீநி னைப்பின்
.. புகுத்தலும் ஆகு மன்றே?

 

No comments: