Tuesday, November 20, 2012

பிரதோஷப் பாடல் - November 14 2009

உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா

நந்திகேசுவரர் துதி


சூடுமதி சங்கரன்றன் தோற்றமதைக் காண்பதற்குத்
தேடிவரும் அடியவரின் திருமேனி தனையணைத்துத்
தாங்கியவ ரோ(டு)அரனின் சால்புரைத்த வாறவரை
ஓங்கிமய உச்சிதனில் உய்க்குநந்தி பதம்பணிவாம்.

பதம் பிரித்து:

சூடுமதி சங்கரன்தன் தோற்றம்அதைக் காண்பதற்குத்
தேடிவரும் அடியவரைத் தினம்தொழுது ஆங்கவர்தாள்
தாங்கி, அவரோடு அரனின் சால்பு உரைத்தவாறு அவரை
ஓங்குஇமய உச்சிதனில் உய்க்கும்நந்தி பதம்பணிவாம்.

***


சிதம்பரநாதன் துதி


தில்லையிலே ஆடிடுவான் தேடுபவர் மனவெளியின்
எல்லையிலே ஆடிடுவான் எழுந்தருள வேண்டினொரு
கல்லினிலே ஆடிடுவான் கசிந்துருகி நாவுரைக்கும்
சொல்லினிலே ஆடிடுவான் தோற்றமிலாப் பரம்பொருளே


ஆடு சிதம்பரத் தையனின் அழகினில்
.. அசைவிலா(து) அழுந்திவிடின்
மாடு மனையொடு மாதரின் உறவென
.. மயங்குதல் மாய்ந்துமனம்
நாடும் அவன்கழல் நாளுமே நமக்கது
.. நல்லவர் கூட்டளித்து
வீடும் பெற்றிட வைத்திடும் இதனினும்
.. வேறெது வேண்டுவதே

No comments: