Tuesday, November 20, 2012

பிரதோஷப் பாடல் - April 07 2009

உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா

நிறைவு

இடும்பைக் குழியில் வீழ்ந்தினிமேல்
.. என்செய் வேனென்(று) இருக்கையில்நீ
நடம்ப யின்றென் முன்வந்து
.. நாளும் உனையே நினைக்கும்வண்ணம்
இடம்பி டித்தாய் என்னகத்தில்
.. இறைவா அதன்பின் உன்அடியர்
குடும்பத் தோடும் கூட்டிவைத்தாய்
.. குறையொன்(று) இலனாய் நிறைந்தனனே!

1 comment:

ananth said...

வணக்கம். பிரதோஷ வரிசையில் மேலுமொரு பாடல். வேறொரு இழையில் 'ஆலயம்- கோவில்' விஷயமாக அறிஞர்கள் இட்ட மடல்களின் காரணமாகத் தோற்றிய செய்யுளிது. பிழை பொறுக்கவும். நன்றி.

(வெண்பா)

மாலயன் தேடிய மாலரனே என்னுடம்
பாலயந் தேர்ந்துன் அடிபதித்து - மூலவராய்க்
கோவிலென் நெஞ்சிற் குடிகொண் டறியாமைத்
தாவிலக நல்லருள் தா.

அன்புள்ள சிவகுமார்,
---------------------------------------------------

அருமையான பாடல். அதன் தொடர்ச்சியாய்:

நெஞ்சத்தை ஆலயமாய் நீதேரின் நின்மல!உன்
கஞ்சமலர்த் தாளையென் கண்களில் ஒற்றியுன்றன்
செஞ்சுடர் மேனி திருநீற்றால் நீராட்டிக்
கொஞ்சுதமிழ்ப் பாமாலை கொண்டுன்னைச் சோடிப்பேன்
அஞ்சற்கிங் கேதுமிலை ஐயாநீ வாராயோ.

அனந்த்
8-4-2009
--------------------------------------------------