Wednesday, November 21, 2012

பிரதோஷப் பாடல் - April 18 2012

உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா

மனத்தை மயக்கும் அந்தி வேளை.

கிழக்கில் மூன்றாம் பிறைச்சந்திரன் உதயமாகித் தனது தண்ணொளியைப் புவியின் மீது போர்த்த முயன்று கொண்டிருக்கிறான்.

அதை நாம் ரசித்துக்கொண்டிருக்கையில், சற்றுத் தொலைவில் செம்பருத்தியை ஒத்த செக்கச் சிவந்த மேனி கொண்ட ஒருவன் தனது விரிந்த கேசத்தில் ஊமத்தம் மலர்களால் ஆன மாலையைச் சூட்டிக்கொண்டு நடந்து செல்வதைப் பார்க்கிறோம்.

அவன் நடக்கும் திசையில் உள்ள பிறைமதி அவன் தலைமீது அமர்ந்திருப்பது போன்ற தோற்றத்தைத் தருகிறது.

அந்தச் செம்மேனியான் தள்ளாடித் தள்ளாடி நடக்கும் விதத்தைப் பார்க்கையில் அவன் அணிந்துள்ள ஊமத்தம் பூக்கள் தம் பெயருக்கேற்ப அவனுக்கு உன்மத்தத்தை ஊட்டிவிட்டது போலவும் மாலை மதியம் அதை மேலும் வளர்த்துவிட்டது போலவும் தெரிகிறது.

நாம் இதைப் பார்த்து மனம் குழம்பிக்கொண்டிருக்கும் வேளையில், நமது ஆள் திடீரென்று ஒரு மலைப் பிரதேச மங்கை ஒருத்தியை இழுத்துத் தன் இடது பாகத்தில் சேர்த்து அணைத்தவாறே மலை மீது ஏறத் தொடங்குவதைக் காண்கிறோம்.

போகிற வழியில் தனது கைநிறையக் கொடிய நஞ்சை ஏந்திப் பருகுவதையும் பார்க்கும் போது இவனுக்குப் பித்தம் தலைக்கேறி விட்டதோ என்ற நினைப்பு நம் நெஞ்சில் ஒரு நடுக்கத்தை உண்டாக்குகிறது, மேலே என்னென்ன நடக்குமோ என்ற அச்சமும் நமக்குள் எழுகிறது.

நம் அச்சத்தை வீணாக்காமல், நமது செம்மேனியான் ஒரு காட்டுப் புலியைக் கொன்று அதன் தோலைத் தன் இடுப்பில் சுற்றிக் கொள்வதையும், அது போதாதென்று தன் சிவந்த உடல் முழுவதும் வெள்ளை வெளேரென்றாகும் வண்ணம் சாம்பலை எடுத்துப் பூசிக் கொள்வதையும் கண்ணுறுகிறோம்.

அடுத்த கணம், அவன் மலையில் அங்குமிங்குமாய் ஓடித் திரியும் பாம்புகளைக் கையில் எடுத்து, அவை அழகிய ஆபரணங்கள் என்று நினைத்தான் என்று நாம் ஐயுறுமாறு, தன் கழுத்திலும் மார்பிலும் இடுப்பிலும் அவன் அணிவதைப் பார்க்கிறோம்.

திடீரென்று எங்கிருந்தோ வந்த ஒரு உடுக்கையை ஒரு கையில் ஏந்தி நமது ’வெண்செம்மேனி அழகன்’ அதை ‘டமடம’ என்று ஒலிக்கும்படி அசைக்கிறான்.

அவ்வொலி அழகிய தாள ஒலியாக மாறுவதை நாம் கேட்டு ஆச்சரியத்தில் ஆழ்ந்து கொண்டிருக்கையில், கூட்டம் கூட்டமாய்ப் பூதங்கள் பல அவனோடு சேர்ந்து நாட்டியம் ஆடத் தொடங்குவதை நோக்குகையில் நம் தலையும் அந்தத் தாள கதியில் சுழல ஆரம்பிக்கிறது………….

இது என்ன அதிசயம்!

அந்தச் சுழற்சியில் நம்முள்ளே ஏன் இவ்வளவு ஆனந்தம் பிறக்கிறது?

இதுவரை நாம் ஒரு பித்தன் என்று கருதுமாறு விநோதமான செய்கைகளைச் செய்த இந்தத் தாண்டவன் மீது ஏனோ சொல்லற்கரிய அன்பு பொங்கி வழிகிறது.

நம் கண்கள் பனிக்க, உடல் சிலிர்க்க அந்த நிலையிலிருந்து வெளிவர மனமில்லாமல் நாமும் அங்கேயே உறைந்து போய் விடுகிறோம்.

இப்போது பாடலைப் பார்ப்போம்:


பித்தன்

மத்தம் பூவைத் தலைக்கணிந்து
.. மதியின் ஒளியில் மயக்கமுற்(று)ஓர்
….. மாதை இடத்தில் இருத்திஉயர்
…… மலைமீ தேறி விடமருந்திப்

புத்தம் புதிய புலித்தோலைப்
…. போர்த்தி உடலம் தனில்சாம்பல்
…… பொடியும் அணியாய்ப் பாம்பினையும்
…… பூண்(டு)ஓர் கையில் உடுக்கையொன்று

தத்தித் தோம்தாம் எனமுழங்கத்
… தாளம் போட்டு நடமாடித்
…. தனக்குத் துணையாய்ப் பூதகணம்
….. தமையும் சேர்த்துக் கூத்தடிக்கும்

பித்தன் மேல்என் பேதைமனம்
…. பிரியம் வைத்(து)அன் னான்பெயரைப்
……. பிதற்றித் திரியும் நிலையையான்
…….. பிறர்க்கு விளக்கத் திறனிலனே.

No comments: