Tuesday, November 20, 2012

பிரதோஷப் பாடல் - June 10 2010

உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா

தில்லைப் பரமன்

மாற்றம் இல்லாப் பெருநிலையை
.. மாயை என்னும் தந்திரத்தால்
நேற்றும் இன்றும் நாளையுமாய்
.. நினைக்கும் படியாய் நீசெய்யும்
தோற்றம் அதனில் உலகமெல்லாம்
.. சுழலும் வகையைத் தில்லையிலே
சாற்றும் சதிரின் பொருளுணர்ந்தோர்
.. சற்றும் அஞ்சார் கூற்றினுக்கே

கூற்றை உதைத்தாய் காலமென்னும்
... கோட்டை உடைத்த பரமனென்னும்
கூற்றை உலகோர்க் குணர்த்துதற்கு;
... கோடில் லாத அம்பரத்தை
ஏற்றாய் ஆடை எனஎங்கும்
... இருக்கும் நிலையை எம்மவர்க்குச்
சாற்றும் வகையால்; சங்கரனே
... சருவம் நீயென் றறிந்தேனே

அறிதற் கென்று வேறொன்றும்
.. ஆங்கில் லாத நிலைதன்னைக்
குறியொன் றதனால் ஆலடியில்
.. கூறா நின்றாய் நால்வருக்கு
நெறியில் பிறழ்ந்த மூவர்புரம்
.. நெரித்தாய் மும்மை மலமெரிக்கும்
திறனை விளக்கத் தேடியுள்ளில்
.. தெரியும் பொருளே! சிற்பரமே!

No comments: