Tuesday, November 20, 2012

பிரதோஷப் பாடல் - February 07 2009

உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா

புதுமை செய்வாய்

புன்புலன் சொலும்வழி பொழுதெலாம் போக்கியோர்
.. பொருளிலா வாழ்வு தன்னை
என்னுளம் விழைந்ததால் இடர்பல அடைவதை
.. ஈசநீ மாற்றொ ணாதோ?
பொன்புடம் செய்வதோர் புதுமையன்(று) உனதருள்
.. புல்லன்என் மாசு நீக்கி
உன்நடம் கண்டிட வைக்குமேல் ஆங்கதே
.. உண்மையில் விந்தை ஐயே!

-------------------------------------


சிவராத்திரிப் பாடல்கள்

மாதரும் மாந்தரும் விரும்பிடா மலர்களை
.. மதியணி சடையில் ஏற்பாய்
சாதலை ஆங்கவர் நினைவிலே கொண்டிடச்
.. சாம்பலைப் பூசி நின்று
மாதவர் காணதீக் காட்டிலே களிநடம்
.. மகிழ்வுடன் ஆடி நிற்பாய்
ஈதெலாம் எங்களை உன்வசம் ஈர்த்திட
.. ஈச!நீ கொள்ளும் செயலே!


போதொடு நீர்சுமந் தேத்திடும் அடியவர்
.. போற்றிடும் ஐய! ஈண்டு
யாதுமோர் வகையிலும் துதித்திலேன் தொழுதிடேன்
.. யானுனை இஃதுஅ றிந்து
பாதகன் இவனென நீயெனைத் தள்ளினால்
.. பாவியேன் யாது செய்கேன்
நாதனே! இங்ஙனம் நாளெலாம் அழுதுளம்
.. நலிவதோர் பூசை அன்றே?


மோதிடும் தீயவாம் நினைவுகள் தம்மிலே
.. மூழ்கியான் தூங்கும் வேளை
காதல்நீ என்னிடம் கொள்வதாய்க் கனவிலே
..கண்டொரு கணமு வப்பேன்
வேதனை மேலிடும் விழித்தபின் நெஞ்சிலே
.. வீணன்யான் என்று ணர்வேன்
நீதயை செய்திடில் நீங்குமிந் நிலையிதை
.. நின்மலன் அறிந்தி டாயோ?

..அனந்த் 11-2-2009

No comments: