Wednesday, November 21, 2012

பிரதோஷப் பாடல் - May 30 2011

உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா

உன்றன் மேன்மை

உண்ணெகிழ்ந் துன்னைநான் உன்னிடுங் கால்மனம்
...உருகிடும் மெழுகை ஒக்க,
.....உலகிலே இதனினும் உயர்ந்ததோர் இன்பமும்
.......உள்ளதோ எனஉ வப்பேன்
 
திண்ணென மறுகணம் தீயன புகுதலால்
...திடமுறும் மனத்தி னாலே
.....செப்பவும் கூசுமோர் செயல்புரிந் தெவரினும்
.......சிறியனாய் உணர்ந்து மாய்வேன்;

வண்ணமாய்ப் பாவிலே வழுத்தினார் அடிகள்நீ
...வான்பொழி மாரி யைப்போல்
.....வழங்குவாய் அருளினை வகையிலார்க் கென;அவர்
........வார்த்தையைக் காக்க வேண்டின்

வெண்மதிச் சடையினோய்! விடையிலே ஏறிநீ
...விரைந்தெனக் குதவி செய்து
.....மேலுமிந் நிலையுனக்(கு) ஏற்படா தென்னுளே
........விலகிடா(து) இருத்தல் நன்றே.



உண்ணெகிழ்ந்து = உள்நெகிழ்ந்து;
மாய்தல் = ஒளி மழுங்குதல்;

”திண்ணென .. மனத்தி னாலே” - ”மறுகணம் தீயன புகுதலால் திண்ணெனத் திடமுறும் மனத்தி னாலே” என்று கொண்டு கூட்டிப் பொருள் கொள்ளவும்.

”வண்ணமாய்....அடிகள்” - ’வானமாய் நின்றின்ப மழையாய் இறங்கிநீ வாழ்விப்ப(து) உன்பரம்காண்’ என்ற தாயுமான அடிகளாரின் பாடலைக் குறிப்பது

No comments: