Wednesday, November 21, 2012

பிரதோஷப் பாடல் - December 22 2011

உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா

பிடித்த கோலம்

மாடேறி ஊரெல்லாம் சுற்றி வந்து
.. மண்டையோட் டில்பெறும் ஊனை யுண்டு
காடேகிக் கணங்களொடு பேய்க ளெல்லாம்
.. காணுமா(று) உருத்திரக் கூத்தும் ஆடி
நாடேஉன் நிலைகண்டு நகைசெய் தாலும்
.. நாத!நின் முகம்தவழ் முறுவல் சற்றும்
வாடாத பாங்கதனைப் பார்க்குங் காலை
.. மகிழ்ச்சியோர் ஆண்டியின் கோலம் தானோ?

சுந்தரனாய்க் கூடலிலே மாதர் கண்டு
.. சொக்கிவிழும் அழகுதவழ் தோற்றம் பூண்டு
கந்தமிகு குழலாள்அங் கயலை ஒத்த
..கண்ணியவள் கரம்பற்றிக் கணவ னென்னும்
அந்தஸ்தை அனுபவித்துத் தெருக்கள் தோறும்
.. அவளுடன்ஆ டம்பரமாய்ப் பவனிசெய்யும்
அந்தநிலை தன்னையுன்னிப் பார்க்குங் காலை
.. அரசுபுரி கோலந்தான் ஐயற் கேற்போ?

முதியதவ முனிவரெலாம் சீட ராக
.. முன்னமர ஆங்கொருகல் லாலின் கீழே
புதியஇள வடிவுடைய ஆசா னென்னும்
.. போர்வையினைத் தேர்ந்தெடுத்து யாரும் காணா
அதிசயமி தெனமறையின் அருத்தம் தன்னை
.. அவர்க்குமொழி கடந்ததொரு மவுனப் பேற்றை
விதித்தவகை தனைநோக்கில் யோகிக் கோலம்
.. விருப்பமெனத் தோன்றுமது மெய்யோ ஐயே?

யென்றும் புவியாளும் அரச னென்றும்
.. அவையொன்றில் ஆசானாய் மௌனக் கோலம்
பூண்டொருகல் லாலடியில் புனித மான
.. போதத்தை ஓதுகின்ற சீல னென்றும்
வேண்டுமடி யாவரர்தம் விழைவுக் கேற்ப
.. வீடுபெறும் மார்க்கத்தைக் காட்டி நிற்கும்
ஆண்டவ!நீ அருளுகின்ற பாங்கை வேறிங்(கு)
.. ஆரிடத்தும் காணேனே அண்டர் கோனே!

No comments: