Wednesday, November 21, 2012

பிரதோஷப் பாடல் - April 30 2011

உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா

விண்ணப்பம்

ஐயன்றன் உடலை அலங்கரிக்கும் பேறுபெற்ற
பையரவே! என்பால் பரிவுகொண்டு - பொய்வாழ்வில்
இன்னலுறு வேனுக்(கு) இரங்கஅவன் காதினிலோர்
நன்மொழிசொல் வாயோ நயந்து?

கங்கையே! அன்னாய்! கயிலையோன் அன்புக்காய்
இங்கே கிடந்தேங்கும் என்பொருட்டு - அங்கவன்றன்
மேனி குளிர்விக்கும் வேளை அவன்செவியில்
நானிருக்கும் சேதி நவில்.

அண்ணல் விரும்பி அணியும் சுடலைவிளை
வெண்ணீறே! உன்றனுக்கோர் வேண்டுகோள் - மண்ணில்
அவன்பெயர் செப்பும் அடியேனைப் பற்றிச்
சிவன்செவியில் சொல்வாய் சிறிது.

No comments: