Tuesday, November 20, 2012

பிரதோஷப் பாடல் - October 04 2010

உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா

என் தகுதி

கருணைக் கயலுள காரியம் யாவையும்
...கடையனேன் புரிந்தவன் தான்
.....கல்லாத மூடனாய்க் கற்றோரின் சொல்லெலாம்
........காற்றிலே விட்டவன் தான்

பொருளையே பெரிதெனப் போற்றிஇப் புவிதரும்
...போகமும் துய்த்தவன் தான்
......பொல்லாத புல்லர்கள் புகன்றசொல் பற்றியென்
  ........புத்தியை இழந்தவன் தான்

தருமமோ தானமோ சார்ந்தவர்க் கீந்திடாச்
...சழக்கையும் உடையவன் தான்
......தாரணி தன்னிலித் தகையன்நான் என்பதைச்
........சருவமும் அறிந்தஉன் முன்

தருவதால் இவையெலாம் தவறென உணர்வதென்
...தகுதியாய் எண்ணிஇந்தத்
......தருணமுன் திருவடித் தருநிழல் சார்ந்திடச்
........சற்றுநீ இடம்கொடா யோ?



சழக்கு- குற்றம், அறியாமை, தீமை

முன்னிட்ட சில பாடல்களைப் போல இதை, அரையடி இறுதியில் ஓரசை பயிலும் பதினான்குசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தமாகக் கருதலாம்.

No comments: