Tuesday, November 20, 2012

பிரதோஷப் பாடல் - November 03 2010

உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா

இவர் தகைமை

தீயின் உருவெடுப்பார் தீயைக்கை ஏந்திடுவார்
பேயின் முன்னிலையில் பிணக்காட்டில் நடமிடுவார்
காயும் தலையோட்டைக் கரந்தாங்கிப் பலிகொள்வார்
தாயில் லாத்தமியர் தகைமையிதைப் புகழ்வதுமென்?

நஞ்சைப் புசித்திடுவார் நலிந்தஉரி அரையுடுப்பார்
அஞ்சும் அரவத்தை அணிகலமாய்ப் பேணிடுவார்
கொஞ்சும் மனைக்(கு)உடலில் குடியிருக்க இடங்கொடுப்பார்
விஞ்சை இறையிவரை வேதமெல்லாம் விரிப்பதுமென்?

ஊரும் கிழமாட்டில் ஊரெல்லாம் திரிந்திடுவார்
நீர்சேர் சடையினிலே நிலவினொரு கீற்றணிவார்
நேராய் ஆல்நிழலில் நிட்டையிலே அமர்ந்திடுவார்
பாரோர் இவற்றையெல்லாம் பாராட்டிப் பேசலுமென்?

தீயின் உருவெடுப்பார்- ஜோதி வடிவில் அடிமுடியின்றிக் காட்சி தருவதைக் குறிப்பது;
விஞ்சை = மாயம், மந்திரம்; பேய் என்பது பேயுருக் கொண்ட காரைக்காலம்மையாரைக் குறிக்கும்).

---------

இலந்தை ராமசாமி சுட்டிய இடங்களைத் திருத்தி (தரவில் மாச்சீரை அடுத்து நிரையசை வரும்படி) அமைத்த வடிவம்:

தீயின் உருவெடுப்பார் தீயைக்கை ஏந்திடுவார்
பேயின் உள(ம்)மகிழப் பிணக்காட்டில் நடமிடுவார்
காயும் தலையோட்டைக் கரந்தாங்கிப் பலிகொள்வார்
தாயில் தமியரிவர் தகைமையிதைப் புகழ்வதுமென்?

நஞ்சைப் புசித்திடுவார் நலிந்தஉரி அரையுடுப்பார்
அஞ்சும் அரவத்தை அணிகலமாய்ப் பேணிடுவார்
கொஞ்சும் மனைக்(கு)உடலில் குடியிருக்க இடங்கொடுப்பார்
விஞ்சை இறையிவரை வேதமெல்லாம் விரிப்பதுமென்?

ஊரும் கிழமாட்டில் ஊரெல்லாம் திரிந்திடுவார்
நீர்சேர் சடையினிலே நிலவினொரு கீற்றணிவார்
நேராய் மரநிழலில் நிட்டையிலே அமர்ந்திடுவார்
பாரோர் இவற்றையெல்லாம் பாராட்டிப் பேசலுமென்
 
No comments: