Tuesday, November 20, 2012

பிரதோஷப் பாடல் - October 01 2009

உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா

இன்று பிரதோஷ நன்னாள். மதுரை மாநகர்த் தெருக்களில் அங்கயற்கண்ணி அன்னையுடன் இடபவாகனராய்ச் சொக்கநாதர் உலாவரும் காட்சியை மனத்தில் கொண்டு அமைத்த பாடல்கள்:

ஐயன் திறம்

ஓடேந்தி ஊரெங்கும் இரப்பார் காணீர்
.. உறுமடியார் படுதுயரம் அறுப்பார் காணீர்
காடெங்கும் நடமாடித் திரிவார் காணீர்
.. கழல்நிழலைச் சார்ந்தோரைப் புரப்பார் காணீர்
மாடேறி மங்கையுடன் வருவார் காணீர்
.. வணங்குபவர் வினைமாய வைப்பார் காணீர்
தோடேந்தும் செவியுடையார் ஆல வாயில்
.. தோற்றுமென்றன் தாதைதிறம் இவையாம் காணீர்!
 
வானோடு வையமெல்லாம் நிறைவார் காணீர்
.. வரையிலொரு பெண்ணுடன்தாம் வசிப்பார் காணீர்
மானோடு படவரவம் புனைவார் காணீர்
.. மதிசெய்த பிழையினையும் பொறுப்பார் காணீர்
தேனோடு பால்முழுக்குத் தேர்வார் காணீர்
.. தென்பாண்டி நாடுகந்த தேவர் காணீர்
ஆனேறி அன்னையுடன் வருவார் காணீர்
.. ஆலவாய் அண்ணல்திறம் இவையாம் காணீர்
 
மேருமலை வில்லெனவே கொள்வார் காணீர்
.. விசயன்கை வில்லடியும் ஏற்பார் காணீர்
ஆருமறி யாப்பரமாய் நிற்பார் காணீர்
.. அடியவருக் கெளியரென ஆவார் காணீர்
சேருமெழில் மங்கையுடன் தெரிவார் காணீர்
... திருமுறைகள் சாற்றுகின்ற தெய்வம் காணீர்
ஊருமெரு(து) தேறிவலம் செய்வார் காணீர்
.. உயர்மதுரைச் சொக்கர்திறம் இவையாம் காணீர்

 

1 comment:

ananth said...

ரொம்ப அழகு ஸ்வாமி..இறைவன் சிந்தனையுடன் இந்நாளை உம் தயவால் தொடங்குகிறேன்,நன்றி.

யோகியார்
----

அருமை!

oogai Natarajan
--------

மதிசெய்த பிழையினையும் பொறுப்பார் காணீர்

உண்மைதான் ; மதி-புத்தி

ilandhai
------------