Tuesday, November 20, 2012

பிரதோஷப் பாடல் - March 27 2010

உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா

பிழை மதியாதான்

அங்கை தவழ்மான் மறியும் மழுவும்
...அரையில் புலியதளும்
....அலையும் புனலாள் தலையில் அமரும்
.....அழகும் அரியவனின்

தங்கை ஒருபால் திகழும் உருவின்
...தயைகூர் திருநோக்கும்
....சாரும் அமரர் முடிமேல் அணியும்
.....சரணும் அடியவர்கள்

கங்குல் பகலாய் மொழியும் தமிழின்
...கனிநேர் சுவைபருகிக்
....களிக்கும் குழையார் செவியும் எழிலார்
.....கண்கள் மூன்றுமெனுள்

மங்கா துறைய வரம்நீ அருளின்
...மாந்தர் செயும்பிழையை
....மதியா நினது மகிமை அறிவார்
.....மதிசேர் சடைஇறையே!
 

No comments: