Tuesday, November 20, 2012

பிரதோஷப் பாடல் - June 20 2009

உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா

இன்று சனிப் பிரதோஷச் சிறப்பு நன்னாள் உலகைக் காக்கச் சிவபெருமான் விடமுண்ட நாள் சனிக்கிழமை என்பதால் தேய்பிறை பட்சத்தில் திரயோதசி திதியில் வரும் மாதப் பிரதோஷம் சனியன்று வருவது விசேடம் என்று கருதுவர்

அகலா நினைவருள்வாய்

சற்று(ம்)நான் கருதிடா வேளையில் சம்புநீ
.... சபைதனில் ஆடுகின்ற
.... தாண்டவக் கோல(ம்)முன் தோன்றிடும் மகிழ்ந்துசீர்
....... சாற்றுவேன் பின்னர் ஓர்நாள்
 
முற்றிலும் முனைந்துனைப் பூசனை செய்யநான்
.. முயன்றிடும் அந்தநேரம்
..மோதிடும் பாதக எண்ணமென் நெஞ்சிலே
...... மூடன்நான் கலங்கி நிற்பேன்
 
உற்றிடும் இத்துயர் அற்றிட ஓர்வழி
.. உதவிஎன் உள்ளமெல்லாம்
.... உன்நினை வன்றிவே றொன்றுமே கண்டிடா
...... ஓர்நிலை தந்து வையப்

பற்றெலாம் விட்டுநற் பரகதி பெற்றிடப்
.. பரிவுடன் அருளுவாயே
.... பார்வதி நேயனே! பசுபதி! ஆலவாய்ப்
...... பதிதனில் உறையும் ஐயே!

No comments: