Tuesday, November 20, 2012

பிரதோஷப் பாடல் - March 24 2009

உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா

உன்வசம் நான்

படுத்திருந்தேன் நீ உசுப்பிவிட்டாய் - இங்கே
.. பாரெனெ ஏதோ பகர்ந்(து)அதன்பின்
எடுத்தவினை எது வாகிலும்நீ - இடும்
.. ஏவலாய்ச் செய்ய எனைவிதித்தாய்
தொடுத்தமொழி தனில் தோன்றிநின்றாய் - நான்
.. சொல்வதெல் லாம்துதி ஆக்கிவிட்டாய்
உடுத்தபுலி அதள் ஆண்டவனே! - என்னை
.. உன்வச மாய்ச்செய்த(து) என்தவமே!

1 comment:

ananth said...

இன்றைய அநந்த் பாடல் ரொம்ப சுவாரஸ்யம். அவரது கற்பனையை நன்கு ரசித்தேன். சந்தமும் நன்று.வாழ்க அநந்த் புகழ்,

யோகியார்


என்னை.. உன்வச மாய்ச்செய்த(து) என்தவமே!

உண்மைதான். எத்தனை பேருக்கு இப்படிப் பிரதோஷப்பாடல் எழுதும் வரம் கிடைத்திருக்கிறது!

இலந்தை


பாடல் பற்றிக் கருத்துச் சொன்ன யோகியாருக்கும் இலந்தையாருக்கும் என் நன்றி.

அவற்றைப் படித்த உடன் என் மனத்தில் தோன்றியது:

நடிப்பு

நெற்றியிலே நீறணிந்து நித்தமுமுன் துதிபாடிச்
சுற்றுமுளோர் முன்னம்நான் தூய்மையுள்ள பத்தனென்றும்
கற்றவர்முன் யாப்பியற்றிக் கவிஞனென்றும் தோன்றிடுவேன்
சிற்சபையில் நடிக்கும்ஐய! சிறியனுமோர் நடிகனன்றோ?

அனந்த்
25-3-2009