Tuesday, November 20, 2012

பிரதோஷப் பாடல் - September 06 2010

உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா

சிறியதோர் துரும்புளும் பெரியதோர் வரையுளும்
.. திகழுமோர் பேருணர்வைச்
... சிற்பர வத்துவாய்ச் செகத்திலே அனைத்தையும்
.... செலுத்திடும் தத்துவத்தை

அறியவே இயன்றிடா தென்றுயாம் எண்ணிவீ(டு)
.. அடைந்திட முயற்சி செய்யா(து)
... அழிந்திடல் தவிர்த்திட ஐயனுன் திருவுளத்(து)
..... அளவிலா அன்பி னாலே

எறிதிரைப் புனலு(ம்)நல் மதியமும் கொன்றையும்
.. இலங்கிடும் சடையனாக
.. எழில்பொழி அணங்குடன் எருதிலே ஏறிவந்
... தெங்கள்முன் காட்சிதந்து

நெறியிதென் றுணர்த்திநின் திருவடி நீழலை
.. நித்தமும் சாருமாறு
... நீட்டினாய் நின்கரம் நிகழ்ந்ததோர் அற்புதம்
... நெஞ்சமுன் மன்றமென்றே

 

4 comments:

ananth said...

1) திருவாசகத்தில் அருட்பத்தில் ஒரு பாடலை நினைவூட்டியது.

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=8&Song_idFie...

திருந்துவார் பொழில்சூழ் திருப்பெருந் துறையில்
செழுமலர்க் குருந்தமே வியசீர்
இருந்தவா றெண்ணி ஏசறா நினைந்திட்
டென்னுடை யெம்பிரான் என்றென்
றருந்தவா நினைந்தே ஆதரித் தழைத்தால்
அலைகடல் அதனுளே நின்று
பொருந்தவா கயிலை புகுநெறி இதுகாண்
போதராய் என்றரு ளாயே.

2) //திருவடி நீழலை நித்தமும் சாருமாறு//

'தினந்தோறும் திருவடித்தலத்தைப் பொருந்தியிருக்குமாறு' என்று பொருள்படுமோ?

அன்புடன், வி. சுப்பிரமணியன்

------------

ஆம். இங்கு, சார்தல் என்பது அணுகி அடைதல், அடைக்கலமாகப் புகுதல், துணையெனச் சார்ந்து நிற்றல் ஆகிய பொருள்களில் பயன்படும்.

அன்புடன்,
அனந்த்


ஓடிக்கொண் டிருந்தேன் மறைநவிலும்
..ஒருகடவுள் உருவம் தனைஅறிய
வாடிப்போய் நின்றேன் உளம்நலிந்து
..வழியெதுவென் றறியா வகையதனால்
ஆடிக்கொண் டென்றன் அருகடைந்தான்
..அவன்கரத்தால் என்கண் திறந்துவிட்டான்
கோடிச்செம் பரிதி ஒளிப்பரப்பில்
.. குதித்திடும்என் ஐயனுள் கரைந்துவிட்டேன்.

திருத்தம்: "குதித்திடும்அச் சிவத்தில் கரைந்துவிட்டேன்"

..அனந்த்
-----------

ananth said...

----------------------
அன்பு அனந்த்
..
சிறியதோர் துரும்புளும் பெரியதோர் வரையுளும்
.. திகழுமோர் பேருணர்வைச்
"என்ற தங்கள் வரிகளில் ஓர் ஐயம். உயிரற்ற துரும்புளும் ,வரையுளும் " உணர்வு எப்படித் தொடர்புடைத்து?
சிறியதோர் துரும்புளும் பெரியதோர் வரையுளும்
.. திகழுமோர் சத்தியத்தை

என்றால் சரியாக இருக்குமோ?
வவேசு
--------------
என் அன்பு வவேசு,
பேருணர்வு என்பதே சரி. நமக்கெலாம் இருப்பது..சிற்றறிவு, சிறு உணர்வு..அவனுக்கிருப்பதோ பேரறிவு. பேருணர்வு.
திருமூலரின் பிரயோகமும் அஃதே.(சட்டென பாடல் ஞாபகம் வரவில்லை)-.
நமக்கிருக்கும் உணர்வால் உயிர் உள்ள விலங்கு, பிற மனிதர்களின்
நுட்பமான உணர்வையும் அறியலாம்.(ஆயினும் அடுத்த நிமிடம் மனிதன் என்ன நினைப்பான் என்பதைக்கூட நம்மால் அறிய இயலாது.) ஆயின் இறைவன் அஃது அறிவான்..
அதுபோன்றே நம்ம ஜகதீஷ் சந்த்ரபோஸ் சொன்னதுபோல் கல்லுக்கும் நுட்பமான உள் உணர்வும், வளர்ந்து பெரும் கல்லாக(மெதுவாய் ஆனாலும்)வரும் ஆற்றலும் உண்டு.கல் தன் உள்ளே தேரையும் வளர அனுமதிக்கிறதே. தெய்வீகக்கல்லாக, பிற்பாடு சிலையாக மாறும் இயல்பையும் பெற்றுளதே.
வரை=மலை.. இப்படித்தானே பல்லாண்டுகள் கழித்து பிரம்மாண்டமாய் வளர்கிறது..(ஆக மெதுவான உணர்வு கல்லுக்கும்(வரைக்கும்) உண்டு என்பதைத்தானே இது காட்டுகின்றது.அவ்வை சொல்லவிலையா? கோடாலிக்கு வளையாத கல் சிறிய செடி வேருக்கு வழிவிடுகிறது.. என்று..

அதேபோல் சிறு துரும்பு இல்லையேல் வெளிச்ச வழியீடு இல்லை. சூரிய ரஸ்மி பூமிக்கு வருவதற்கு துரும்பின் ஒழுங்கான பிரதிபலிப்பு தேவை அன்றோ?.. ஆகவே துரும்பும், வரையும் மனிதன், செடி, விலங்கு முதலியவற்றுக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ உதவுகின்றன.
மனிதனுக்கு இதன் நுட்ப உணர்வு தெரிவதில்லை.. நீ கேள்விப்பட்டிருப்பாயே.
சில தெய்வீக மூலிகைகள் ஒரு நாத்திகனுக்கு புலப்படா.
ஒழுங்கான விரதம் இருந்து, மூலிகைக்கு அதிபதியை ஜபம் செய்து, குறிப்பிட்ட பௌர்ணமியிலோ, அல்லது அமாவாசையிலோதான் அம்மூலிகைகள் கண்ணுக்குப்புலப்படும். இது அனைத்து சித்தவைத்தியர்களும் உணர்ந்த ஒன்று.
இவையெல்லாம் இறைக்கு, அந்த பேருணர்வுக்குத் தெரியும் என்பதையேபெரும்புலவர் அநந்த் சுட்டினார். சிறந்தஇயல் விஞ்ஞானியாகிய நீயும் அறிவாய்... எனினும் ஒரு வாதம் கிளப்பவே இவண் அவ்வாறு சுட்டினாய் என அறிவேன் யான். நன்றி.
யோகியார்
------------------------------
சிவா, அநந்த்,ஹரி போன்றவர்கள் அந்த குறிப்பிட்ட திருமந்திரப் பாடலைத்தரின் மகிழ்வேன் மிக்க.(பேருணர்வு.. என்று வரும் அதில்),
யோகியார்

--------------------------------------------------------------

அன்பு வேதம்

என் வினாவுக்குரிய தெளிவான விடைக் கடிதம் கண்டேன்.நன்றி. உண்மைதான்.

இறைவன் உணர்வாகவும் உள்ளான்; உணர்வற்றும் உள்ளான். கல்லுக்குள் தேரையாக இருப்பவன், தேரையில்லாத கல்லுக்குள் வெற்றுக் கல்லாகவும் தானே இருப்பான். உருவமும் அவனே; அருவமும் அவனே; சலனமும் அவனே: சடப்பொருளும் அவனே; உயிரற்ற பொருளாகிய துரும்புக்குள்ளும், வரைக்குள்ளும் அவன் உள்ளான் என்றாலும், அப்பெருஞ்சக்தி அங்கே உணர்வோடு உள்ளதா? உணர்வற்று உள்ளதா?

உணர்வற்று இருப்பதுவும் இறைவன் குணமன்றோ? எனவேதான் " சத்தியம்" என்ற சொல் இன்னும் பொருந்துமா என்று வினவினேன்.

சத்தியத்துள், உணர்வு உணர்வின்மை இரண்டும் அடங்கும்தானே!

எனினும் படைக்கின்ற கவிஞனுக்குத்தான் சொல்லைத் தேர்ந்தெடுக்கும் முழுஉரிமை உண்டு. எழுதிய கவிஞர் இதனை எந்த நோக்கில் படைத்துள்ளார் என்று அறியவும் ஆவல்.

அன்புடன்
வவேசு
============

ananth said...

அன்புநிறை அனந்த் ஐயா,

சந்தவசந்தத்தில் உங்களது ' பிரதோஷ' இழையில் கீழ்க்கண்ட வினாவை திரு. வ.வே.சு ஐயா எழுப்பி இருந்தார். அதை இன்று படிக்கும் வாய்ப்பு கிட்டியது. அதற்கு எனக்கு தோன்றிய விளகக்த்தை, அதன் கீழேயே இட்டு தங்களுக்கு அனுப்பி இருக்கிறேன்.

]]]]2010/9/21 Dr Subramanian

அனந்த் ஐயா,

நீங்கள் எழுதியது வேத வாக்கியமான அணோரணீயான், மஹீயோ மஹீயான் எனும் சொல்லோடு பொருந்தி வருவது.

அவ்வாறு அணோரணீயானாக, மஹீயோமஹீயானாக இருப்பது பேருணர்வாகிய (பிரஞ்ஞை) பரவஸ்துவே. எனவே பேருணர்வு என்பது நன்றாக பொருந்தி வருகிறது
-----------------
அன்புள்ள சங்கர்,

நான் எழுதும் எளிய பாடல்களையும் பின்னூட்டங்களையும் நீங்கள் படித்து வருவது பற்றி நன்றி என்பதைத் தவிர மேலும் சொல்ல ஆவல் இருந்தும் என்ன சொல்வது என்று தெரியவில்லை.

நீங்கள் தந்த விளக்கம் கவிதையை எழுதும்போது நான் மனத்தில் நினைத்த கருத்தோடு முற்றிலும் ஒத்ததாக உள்ளது.

(விஷ்ணு ஸஹஸ்ரநாமத்திலும், அணவே நமஹ என்று சொன்ன அடுத்த துதியில் ப்ருஹதே நமஹ என்று வருவதையும் .அவற்றை அடுத்து, சிறியதான ’க்ருச’ (Lean, weak ,emaciated, small , little , minute , insignificant ), ஸ்தூல (large, thick, massive, bulky, big, huge, coarse, gross, rough) ஆகியவை வருவதையும் காணலாம்.
இவற்றுளெல்லாம் ப்ருஹ்மமாகிய பேருணர்வு-consciousness or awareness, ப்ரக்ஞை-விளங்குகிறது.

என் பாடலில் ‘பேருணர்வு’ என்ற சொல்லாட்சி உணர்ச்சி அல்லது feeling அல்லது தானாக எண்ணும் திறமை, மனம் என்பன போன்றவற்றைக் குறிப்பது அன்று.

அது நீங்கள் சரியாகச் சுட்டிய ப்ரக்ஞையைக் குறிக்கும். எங்கும் உள்ள ஆகாசம் (வெளி) குடத்தினுள்ளும் இருப்பது போல இந்தப் பேருணர்வு எங்கும் வியாபித்துள்ளது.

உங்கள் அனுமதி கிட்டினால் உங்கள் விளக்கத்தைச் சந்த வசந்தத்தில் இடுவேன். பதிலை எதிர்பார்த்து,

அனந்த்
----------------------------
அன்பு ஐயா

உங்களுடைய பாடல்களை அடியேன் மட்டுமல்ல, அன்று அண்ணாவும்(காழியூரன்) படித்தார்.
]]]உங்கள் அனுமதி கிட்டினால் உங்கள் விளக்கத்தைச் சந்த வசந்தத்தில் இடுவேன்.[[[

தாராளமாக இடலாம் ஐயா.
அத்துடன் உங்கள் விளக்கத்தை சேர்த்து இட்டால் இன்னும் அருமையாக இருக்கும்.

அன்பன் சேகர்
-----------

ananth said...

அன்புள்ள வ.வே.சு.,

என் பாடலைப் படித்து, ஆழ்ந்த வினாவொன்றை எழுப்பிய உங்களுக்கும், விளக்கம் தந்த கவியோகியாருக்கும் என் நன்றி. என் பதிலைத் தாமதித்து எழுதுவதற்கு மன்னிக்கவும். தனி அஞ்சல் ஒன்றில், உங்கள் கேள்வியைச் சுட்டி, அதற்கு விடையாகத் திரு. சேகர் என்னும் அன்பர் எனக்கு எழுதியிருந்தார். அவர் அனுமதியோடு அதைக் கீழே இடுகிறேன்:

”நீங்கள் எழுதியது வேத வாக்கியமான அணோரணீயான், மஹீயோ மஹீயான் எனும் சொல்லோடு பொருந்தி வருவது. அவ்வாறு அணோரணீயானாக, மஹீயோமஹீயானாக இருப்பது பேருணர்வாகிய (பிரஞ்ஞை) பரவஸ்துவே. எனவே பேருணர்வு என்பது நன்றாக பொருந்தி வருகிறது“

இதற்கு நான் அவருக்கு எழுதிய பதில் அஞ்சலில் சொன்னது:

”நீங்கள் தந்த விளக்கம் கவிதையை எழுதும்போது நான் மனத்தில் நினைத்த கருத்தோடு முற்றிலும் ஒத்ததாக உள்ளது. (விஷ்ணு ஸஹஸ்ரநாமத்திலும், ’அணவே நமஹ’ என்று சொன்ன அடுத்த துதியில் ’ப்ருஹதே நமஹ’ என்று வருவதையும் .அவற்றை அடுத்து, சிறியதான ’க்ருச’ (Lean, weak ,emaciated, small , little , minute , insignificant ), ஸ்தூல (large, thick, massive, bulky, big, huge, coarse, gross, rough) ஆகியவை வருவதையும் காணலாம். இவற்றுளெல்லாம் ப்ருஹ்மமாகிய பேருணர்வு-consciousness or awareness, ப்ரக்ஞை-விளங்குகிறது. என் பாடலில் ‘பேருணர்வு’ என்ற சொல்லாட்சி உணர்ச்சி அல்லது feeling அல்லது தானாக எண்ணும் திறமை, மனம் என்பன போன்றவற்றைக் குறிப்பது அன்று. அது நீங்கள் சரியாகச் சுட்டிய ப்ரக்ஞையைக் குறிக்கும். எங்கும் உள்ள ஆகாசம் (வெளி) குடத்தினுள்ளும் இருப்பது போல இந்தப் பேருணர்வு எங்கும் வியாபித்துள்ளது.”

இனி, கவிதையை எழுதும் போது நான் சொல்ல வந்த கருத்தைச் சற்று விளக்க விரும்புகிறேன்.
ப்ரஹ்மம் என்றும் பரம்பொருள் என்றும் சுட்டப்படுகிற இறைத்தன்மை இடம் (space), பொருள் (maater or mass), காலம் (time) ஆகிய அனைத்தையும் தாண்டிய “பேருணர்வு” அல்லது Absoulte Awareness or Absolute Consciousness” ஆகும். இது ஸத்,சித்,ஆனந்தம் என்ற மூன்று தத்துவங்களும் ஒருமித்த இறைத்தன்மை. இந்த இருத்தல், அறிவு/உணர்வு, பேரின்பம் என்பதற்கு, உண்மையை (’ஸத்’தை) அறிவது/உணர்வதே (ப்ரஹ்ம)ஆனந்தம் என்று பொருள் கொள்வதுண்டு எனினும் இவை ஒன்றுக்கொன்று பிரித்துப் பார்க்க இயலாதவை. இந்த இரண்டற்ற, (அத்வைத), குணமற்ற (நிர்க்குண) நிலையிலிருந்து ஸகுணப் ப்ரஹமாக இந்தப் ப்ரபஞ்சமாக இறைத்தன்மை வெளிப்படும்போது, அவ்வாறு ”படைக்கப் பட்டவை” யாவும் இடம். பொருள், காலக் கட்டுக்குள் அடங்குவதோடு, அவற்றுள் ஸத் என்னும் consciousness-ம் சித் என்னும் அறிவும் அல்லது உணர்வும் (மாயையின் விளைவால்) குறுகிய வட்டத்திற்குள் பயிலும், ஆயினும் அவை ப்ரஹ்மத்தின் வடிவங்களே.

திருவாசகத்தில் வரும் ‘..சொல்லாத நுண்ணுணர்வே மாற்றமாம் வையகத்தில் வெவ்வேறே வந்(து)அறிவாம் தேற்றனே” என்னும் வரி மாறுதல் அடைந்துகொண்டே இருக்கும் உலகத்தில் வெவ்வேறாகக் காணப்படுபவைகளுக்குள் இருக்கும் (ஸத்) நுட்ப அனுபவமாய் அறியப்படுபவனாக இறைவனைக் குறிப்பதைக் காணலாம்.

எனவே, துரும்பும், மலையும், மனிதனும், கிருமியும் தாமே பேருணர்வுப் பரம் என்பதை அறியாது/உணராது இருக்கும் (not conscious or aware of the Real Self). ஆனால் பேருணர்வு (ப்ரஹ்மம் அல்லது, ஸகுண உருவில், கடவுள்) அவற்றுள் எப்போதும் இருக்கும். ஒரு சிறிய அணுவிலும், அதனுள் இருக்கும் நுண்துகள்களின் உள்ளேயும் கூட சிற்றறிவு (உணர்வு) இருப்பதை அவற்றின் நடத்தையிலிருந்து ஊகிக்கலாம். ஹைட்ரஜன் அணு, தான் எந்த அணுக்களோடு, எப்போது, எவ்வாறு சேர்ந்து ஒரு மூலக்கூற்றை ஒருவாக்கலாம் என்பதை ‘அறிந்து’ கொண்டிருப்பதற்குக் காரணம் அதன் உள் இயங்கும் பேருணர்வே காரணம் என்று எனக்குப் படுகிறது.

தேவைக்கு மேலான நீண்ட விளக்கமாக அமைந்து விட்டது. மன்னிக்கவும்.

அன்புடன்
அனந்த்

பி.கு. இன்று எல்லா ஆலயங்களிலும் நடராஜப் பெருமானுக்கு அபிஷேகம் காணும் விழா நாள். ஒரு ஆண்டில் நடராஜருக்கு ஆறு காலங்களில் சிறப்பு அபிடேகம் நடைபெறும். அவற்றுள், இந்தப் புரட்டாசி சுக்கில சதுர்த்தியில் (இரவில்) நடப்பது ஆறாவது காலம். அவனைப் பற்றி இன்று எழுதுவதும் ஒரு பேறே.
----------------