Monday, November 26, 2012

யாதும் வேண்டான் - September 27 2012

உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா

<>  யாதும் வேண்டான் <>


மரைமலர் மிசைநான் மறைபல புகலும் மறையவன் போலநீ அன்றி
.மரநிழல் தனிலொர் வலியகல் லமர்ந்து மவுனமாய் மெய்ப்பொருள் குறிப்பாய்

திரைகட லிடையில் திருமகள் துணைவன் சீருடன் அரவணை துயிலத்
…திமிலெரு தேறித் தினமிரை தேடித் திரிந்(து)இடு காட்டினில் நடிப்பாய்

வரையதன் முடிமேல் வளர்பனி நடுவில் வானொரு கூரையாய்க் கொண்டு
…வருமடி யவர்தம் மனமுறை மலத்தால் வருதுயர் மாய்த்திடும் வழியை

உரைசெய உலகில் ஒருபொருள் விரும்பா உன(து)உயர் உளநிலை காட்டி
….ஒப்பில தான உயர்கதி அடியர் உறவருள் புரிஇறை யோனே.


மரை = தாமரை;   திமில் எருது = முதுகில் திமிலை உடைய காளை;
 மனம் உறை மலம்= மனத்தில் உறையும் மாசு/கெட்ட எண்ணங்கள்; மனத்தில் உள்ள ஆணவ மலத்தைக் குறிப்பதாகவும் கொள்ளலாம்

யாப்பு: 14-சீர் ஆசிரிய விருத்தம். அரையடி: கருவிளம் மா விளம் மா விளம் விளம் மா

அனந்த் 27-9-2012

பாடல் பொருள்:

மும்மூர்த்திகளில் ஒருவனான சிவபெருமானுக்கும் மற்ற இருவர்க்கும் இடையே உள்ள வேறுபாட்டைச் சுட்டி அரனின் பெருமையை விளக்குவது இப்பாடலின் கருத்து.

படைப்புத் தொழிலை மேற்கொண்ட பிரமன் தாமரை மலர் மீது சொகுசாக அமர்ந்து கொண்டு நான்கு வேதங்களை வாயினால் அவற்றின் பிரணவாகாரமாகிய உட்பொருளை அறியான்.

ஆனால் சிவனோ ஆலமரத்தடியில் ஒரு கடினமான கல்லை ஆசனமாகக் கொண்டு தனது மௌனத்தின் வழியே மறைகளின் மெய்க்கருத்தை விளக்குவான்.

காக்கும் தொழில் செய்யும் திருமாலோ எனில், அலை வீசும் பாற்கடலின் நடுவில், தன் மனையாள் அருகில் அமர்ந்திருக்க, ஆடை ஆபரணங்களை அணிந்து கொண்டு சுகமாக பாம்புப் படுக்கையில் பள்ளிகொண்டு உறங்குவான்.

ஆயின், சிவபெருமானோ தி்மில் உடைய எருதொன்றின் மேலேறி நாள்தோறும் தனது உணவைத் தேடி அலைந்து, இறுதியில் சுடுகாட்டில் தனது தொழிலாகிய அழித்தருளலைச் செய்வான்.

மேற்சொன்ன செயல்களாலும், பனி பெருகிப் பெய்யும் மலையொன்றின் சிகரத்தில் வானமே கூரையாகக் கொண்டு அமர்ந்திருக்கும் காட்சியாலும் அரன் ஒரு அரிய உண்மையைத் தனது அடியவர்க்குத் தெரியப்படுத்துகிறான்.

அது யாதெனில், தமது மனத்திலுள்ள மாசுகளால் விளைகின்ற, (பிறப்பு-இறப்பு எனும்) துன்பங்கள் நீங்கி ஒப்பற்ற முத்தி நிலைக்குச் செல்ல சிவனைப் போல அவ்வடியார்களும் உலக இன்பங்களில் நாட்டம் கொள்ளாமல் (பற்றற்று) இருப்பதே ஆகும்.
=============


திமிலெரு தேறித் தினமிரை தேடித் திரிந்(து)இடு காட்டினில் நடிப்பாய்

மாபெரும் நடிகன் மட்டுமல்ல ஆசிரியர் கூட.. காசியில் அன்னபூரணி தன்
அட்சயபாத்திரத்தை வைத்துக்கொண்டு காத்திருக்கையில் இந்திரன் முதலா தேவர்கள் அவளிடம் பிச்சை ஏந்த மனமில்லாமல் (தங்களுக்கெல்லாக எதற்காக உணவு என நினைத்தார்களோ என்னவோ) அன்னையிடம் செல்லாதிருக்க, முதல் கையேந்துவனாக அன்னபூரணியிடம் சிவன் இவனே போய் நின்றானாம்.. ‘பவதி.. பிக்ஷாந்தேகி’..  அட, அகிலத்தையும் ஆட்டிப் படைக்கும் ஆண்டவனே இப்படியா என்று அலறி அடித்துக்கொண்டு இந்திராதி தேவர் முதலானோர் அன்னபூரணியிடம் அடைக்கலமாயினர் (நன்றி - சாகண்டி கோடீஸ்வரராவ்)

..திவாகர்


1 comment:

ananth said...

----------
திமிலெரு தேறித் தினமிரை தேடித் திரிந்(து)இடு காட்டினில் நடிப்பாய்

மாபெரும் நடிகன் மட்டுமல்ல ஆசிரியர் கூட.. காசியில் அன்னபூரணி தன் அட்சயபாத்திரத்தை வைத்துக்கொண்டு காத்திருக்கையில் இந்திரன் முதலா தேவர்கள் அவளிடம் பிச்சை ஏந்த மனமில்லாமல் (தங்களுக்கெல்லாக எதற்காக உணவு என நினைத்தார்களோ என்னவோ) அன்னையிடம் செல்லாதிருக்க, முதல் கையேந்துவனாக அன்னபூரணியிடம் சிவன் இவனே போய் நின்றானாம்..

பவதி.. பிக்‌ஷாந்தேகி’..

அட, அகிலத்தையும் ஆட்டிப் படைக்கும் ஆண்டவனே இப்படியா என்று அலறி அடித்துக்கொண்டு இந்திராதி தேவர் முதலானோர் அன்னபூரணியிடம் அடைக்கலமாயினர்

(நன்றி - சாகண்டி கோடீஸ்வரராவ்)

..திவாகர்
…………………………………