Monday, November 19, 2012

பிரதோஷப் பாடல் - January 30 2007

உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா

நீ மறந்திடல் ஆகுமோ?

ஊனி னாலுரு வான ஓருடல் பெற்ற தால்பிணி உற்றனேன்
மானி நேர்விழி யாரின் மையலில் மாயும் பாழ்மனம் பெற்றனேன்
கூனி ளம்பிறை சூடு கூத்த!பல் குற்ற மேநிறை மானுடன்
நானு னைமறந் தாலும் நாயகன் நீம றந்திட லாகுமோ?

-----------------------------------------------------------------------------

விளக்கம்:

'நற்றவா! உனை நான் மறக்கினும் சொல்லுநா நமச்சிவாயவே" என்றார் சுந்தர மூர்த்திப் பெருமான். அவர் பரமனைத் தோழனாகப் பெற்ற தெய்வீகப் பிறவி. ஆனால், பிறப்பிறப்பென்னும் பவநோயில் வாடும் ஊன் உடம்பும், உலக மாயையில் மயங்கும் மனமும் பெற்று எப்போதும் குற்றமே புரிகின்ற அற்ப மானிடனான நான் உன்னை மறத்தல் மிக எளிதே. ஆயினும், பிரபஞ்சத்திற் கெல்லாம் தலைவனான நீ, பிழைசெய்த சந்திரனைத் தலையில் தூக்கிவைத்துச் சிறப்புத்தந்த நீ, என்னை எவ்வாறு மறந்திடலாகும்? (அது நியாயமன்று என்றவாறு).

இதே கருத்தைச் சற்று விரித்து அமைத்த விருத்தம்:

ஊனார் உடம்பெடுத்(து) ஓயாத வாதனைகள் ஆயிரம் வாட்டி யென்றன்
..ஓரோர் கணத்தையும் உதவாத வாறாக்கல் ஒருபுறம் மற்று மாங்கே
மானார் விழியுடை மங்கையரின் இன்ப(ம்)விழை மனமெனும் பகையு முண்டு
..மாறாத் துயருறு வாழ்க்கையிதில் நாடோறும் வாடிடும் மானி டன்நான்
வானோர் நலம்பெறு வகைவேண்டி நஞ்சுண்ட தேவ!நின் கருணை யாலே
..மாசை மறந்துநீ மதியினைஉன் முடிமீது வைத்த(து)ஊர் அறியு மன்றோ?
நானோர் கணமுமுன் நாமத்தை நினையாமல் நாளெலாம் போக்கி னாலும்
.. நாதன் உனதுயர் நலம்கருதின் நீஎன்னை மறந்திடல் நியாய மன்றே!

--------------------------------------------

சுந்தரமூர்த்தி நாயனாரின் தேவாரம்:

மற்றுப் பற்றெனக் கின்றி நின்திருப் பாத மேமனம் பாவித்தேன்
பெற்ற லும்பிற வேனி னிப்பிற வாத தன்மைவந் தெய்தினேன்
கற்ற வர்தொழு தேத்து சீர்க்கறை யூரிற் பாண்டிக் கொடுமுடி
நற்ற வாஉனை நான்ம றக்கினும் சொல்லு நாநம சிவாயவே!

------------------------------------------

No comments: